பாரம்பரிய கலை மரபை மீட்டெடுத்த ‘நாட்டியஞ்சலி 2026
கே.கே.ஆர்.தேவி
ஜோகூர் பாரு, மே 10– “நாட்டியத்தின் வழி ஒரு சமர்ப்பணம்” என்ற கருப்பொருளில், நடராஜர் நாட்டிய ஆலயாவின் பிரமாண்டமான கலை நிகழ்ச்சி ‘நாட்டியஞ்சலி 2026’ கடந்த மே 1ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரங்கேறிய இந்நிகழ்ச்சி, பாரதநாட்டியத்தின் செழுமை, அதன் ஆன்மிக ஆழம், தமிழர் கலை மரபின் உயர்வை வெளிப்படுத்திய ஒரு முக்கிய கலாச்சார நிகழ்வாக அமைந்தது.
மலேசியாவின் ஜோகூர் பாருவில் இயங்கி வரும் நடராஜர் நாட்டிய ஆலயா, பாரம்பரியம், ஒழுக்கம், கலை நயம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இளம் தலைமுறைக்கு கலைக் கல்வி வழங்கி வரும் முன்னணி கலை நிலையமாக திகழ்கிறது.
இந்நிகழ்வை வழிநடத்திய குரு ஸ்ரீ ராஜேந்திரன் ஸ்ரீனிவாசர் அழகர், பல ஆண்டுகளாக பாரதநாட்டியத்துடன் இணைந்த பாரம்பரிய, மக்கள் நாட்டிய வடிவங்களையும் அர்ப்பணிப்புடன் கற்பித்து வருகிறார்.
அவரது பயிற்சியில் வளர்ந்த மாணவர்கள், இந்நிகழ்வில் தங்களின் திறமை, அபிநய ஆழம், கலை ஒழுக்கத்தை சிறப்பாக வெளிப்படுத்தினர்.
குருவின் கற்பித்தல் முறையில் நாட்டிய நுட்பங்களோடு பக்தி உணர்வு, பண்பாட்டு விழிப்புணர்வு மற்றும் ஒழுக்கம் ஆகியவை முக்கியத்துவம் பெறுவது, நிகழ்ச்சியின் ஒவ்வொரு அங்கத்திலும் தெளிவாக பிரதிபலித்தது.
மேலும், மாணவர்கள் வெறும் கலைஞர்களாக மட்டுமின்றி, தமிழர் பண்பாட்டு மரபை தாங்கிச் செல்லும் பண்பாட்டு தூதர்களாக உருவாகி வருகிறார்கள் என்பதையும் இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டியது.
குருவின் சிந்தனை, கலை வடிவமைப்பில் உருவான இந்நிகழ்ச்சியை, அவரது மூத்த மாணவர்களில் ஒருவரான கரும் ராம் திவ்வல ராஜன் இணைந்து அமைத்திருந்தது நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பை சேர்த்தது.
மொத்தம் 27 மாணவர்கள் பங்கேற்ற இந்த நாட்டிய அரங்கேற்றின. அபிநயத்தின் ஆழம், இசை, லய ஒத்திசைவு, மேடை அமைப்பு ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தன.
“இது ஒரு சாதாரண கலை நிகழ்ச்சி அல்ல; இது ஒரு பாரம்பரியத்தின் மறுபிறப்பு. ஒரு கலை மரபின் உயிரோட்டமான தொடர்ச்சி” என்ற உணர்வை நாட்டியஞ்சலி 2026 அனைவரின் மனதிலும் பதித்துச் சென்றது. - Alaiolinews


Comments
Post a Comment