சிலாங்கூர் மாநிலம் வெளியிடும் ஆண்டு காலண்டரில் விஷூ மலையாளப் புத்தாண்டு குறித்த விவரம் வெளியிடப்படும்!- பாப்பா ராய்டு அறிவிப்பு
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம், மே 5 - சிலாங்கூர் மாநில அரசின் ஆண்டு காலண்டரில், விஷூ மலையாளப் புத்தாண்டு குறித்த தகவல் அடுத்த ஆண்டில் இடம் பெறும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் தெரிவித்தார்.
வருடந்தோறும் வந்து போகும் அனைவரது விழா கால கொண்டாட்டம், புத்தாண்டு போன்ற விவரங்கள் இது காறும் மாநில காலண்டரில் இடம் பெற்று வந்த நிலையில், மலையாளிகள் ஆண்டுதோறும் வரவேற்று கொண்டாடும் விஷூ புத்தாண்டு தகவலும் வரும் ஆண்டில் இடம் பெறச் செய்யும் நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்துச் செயல்படுத்த விருப்பதாக அவர் கூறினார்.
மலையாளிகள் சங்கத்தினர் இங்கு ஷா ஆலம் டேவான் அஸாலியா மண்டபத்தில் பல்வேறு மலையாள கலை கலாசார, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்த மாநில அளவிலான விஷூ புத்தாண்டு கலை விழாவில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து கலந்து கொண்ட பாப்பா ராய்டு மேற்கண்ட அறிவிப்பை தமது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில ரீதியில் வசித்து வரும் மலையாளிகள் மட்டும் இன்றி மலேசிய அளவில் வாழ்ந்து வரும் மலையாளிகள் குடும்பத்தினர் அனைவருக்கும் விஷூ மலையாளப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு தமது வாழ்த்துரையில் தெரிவித்தார்.
மலையாளக் கலைஞர்களின் கலைப் படைப்புகள் பண்பாட்டு நிகழ்ச்சிகள் மனம் கவரும் வகையில் அமைந்துள்ளது கண்டு தாம் வெகுவாகப் பாராட்டுவதாக அவர் கூறினார்.
விஷூ மலையாளப் புத்தாண்டு கலை விழாவில், கோத்தா கெமுனிங் சட்ட மன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், டத்தோ ஜோய் அப்புகுட்டன், வி.பத்மநாதன், மலையாளிகள் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் கே.மனோகர் குருப், சிலாங்கூர் மாநில மலையாளிகள் சங்கத்தின் தலைவர் ஹில்டா அல்போசில்வா, பிரதமர் துறை சிறப்பு அதிகாரி ஜெஸ்டின் ராஜ் சவரிமுத்து, மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் கிராமத் தலைவர்கள், மாநில அரசின் அதிகாரிகள், பொது மக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விஷூ மலையாளப் புத்தாண்டு கலை விழாவில் பங்கேற்றனர்.-Alaiolinews

.jpeg)

.jpeg)

Comments
Post a Comment