மக்கள் தீர்ப்பை மதிக்காத ஆட்சிமுறை ஜனநாயகத்திற்கு ஆபத்து - லினா மனோ அருண்!
கே.கே.ஆர்.தேவி
ஜோகூர், மே 10 – மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஐந்து பேரை ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க வழிவகுக்கும் அண்மைய சட்டத் திருத்தம், ஜனநாயகத்தின் உண்மையான நோக்கத்தையே கேள்விக்குறியாக்குவதாக மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தேசிய சக்தி பிரிவு துணைத் தலைவரும் ஜோகூர் மாநில சக்தி பிரிவு செயலாளருமான லினா மனோ அருண் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தின் மையமாக மக்கள் வழங்கும் வாக்கும் ஆணையும் தான் இருப்பதாக அவர் கூறினார். அந்த நிலையில், மக்களின் நேரடி தேர்வின்றி சிலர் மாநில நிர்வாக முடிவுகளில் பங்கேற்கும் சூழல் உருவாகுவது, மக்களின் அதிகாரம் குறைக்கப்படுகின்றது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது சாதாரண அரசியல் மாற்றமாக பார்க்கப்படக் கூடாது என்றும், “மறைந்திருக்கும் ஜனநாயக எச்சரிக்கை” எனக் கருத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரசின் அனைத்து அமைப்புகளும் வெளிப்படைத் தன்மை, மக்கள் பிரதிநிதித்துவம் மற்றும் பொது பொறுப்புணர்வு ஆகிய அடிப்படை கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்களே தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமையிலிருந்து விலகும் எந்த முயற்சியும் ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என்றும், இது ஒரு “சிவப்பு எச்சரிக்கை” எனவும் லினா மனோ அருண் எச்சரித்தார்.
இன்றைய புதியகால அரசியல் சூழலில் மக்கள் வெறும் நிர்வாகத்தையே எதிர்பார்ப்பதில்லை என்றும், நேர்மை, பொறுப்புணர்வு, மக்களுடன் இணைந்த தலைமைத்துவம் ஆகியவற்றையும் முக்கியமாகக் கருதுகின்றனர் என்றும் அவர் கூறினார்.
மாநில மற்றும் தேசிய நிர்வாகங்கள் செயல்படும் போது, மக்கள் வழங்கிய ஆணை புறக்கணிக்கப்படுகின்றது என்ற எண்ணம் தோன்றாத வகையில் மிகுந்த பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஜனநாயகத்தின் வலிமை என்பது மக்களின் நம்பிக்கையிலும் அவர்களின் ஒப்புதலிலும் தான் நிலைத்து நிற்கிறது என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நேரடியாக மக்களிடம் பொறுப்பேற்கும் நிலை தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக, ஜனநாயகம் வெறும் பெயரளவிலான அமைப்பாக மாறக்கூடாது என்றும், மக்கள் நம்பிக்கையை பாதுகாக்கும் ஆட்சிமுறையே உண்மையான ஜனநாயக ஆட்சியாக இருக்கும் என்றும் லினா மனோ அருண் கூறினார்.-Alaiolinews

Comments
Post a Comment